Thursday, March 27, 2008

மேதகு கணவன் அவர்களுக்கு..


சுவாதிக்கு எப்பவுமே ஆண்கள் திருடர்களும் சுயநலக்காரர்களும்தான். திருமண ஆன முதல் இரண்டுநாட்களுக்கு பெரிதாக நீட்டிமுழக்கி கொன்வர்சேசன் செய்ய வாய்ப்பில்லாமல் போனதோ அல்லது சுவாதி வாயைத் திறந்து பேசினாலே இவனைக்கொண்டு போய் ஐஸ்கிரீம், ரோசாப்பூ , நட்சத்திரங்கள் நிறைந்த‌ ஒரு இன்பத் தீவிலே இறக்கிவிட்டது போலிருந்ததுவோ, ஏதோ ஒன்றுதான் காரணமாக இருந்திருக்கமுடியும். ஆக சுவாதி ஆணின் பேரிலே இப்படி ஒரு 'அடிமாட்டுக்' கருத்து கொண்டிருப்பாள் என்பது உறைத்தபோது ஏதோ ஒன்றை வகையாக செய்து மாட்டிக்கொண்டிருந்தான் காருண்யன். அப்படித்தான் ஒருதரம் 'ஆண்கள் எல்லோரும் சரியான பெர்வெர்ட்ஸ்" என்றாள். முதலில் சும்மா இருந்தவன், அடுத்தமுறை அதேபோல் சொல்லும்போது,

"உங்க அப்பா கூட அப்படித்தானா?" என்றான். பிறகு அதற்கும்சேர்த்து வாங்கிக்கட்டிக்கொள்ளவேண்டியதுதான். வேறு என்ன நடக்கப்போகிறது?

காருண்ய‌னின் ஆண்க‌ட்சி கொடி ப‌ற‌க்க‌ ஆர‌ம்பித்த‌து.

"நம்பர் ஒன். எல்லாரும் அப்படி கிடையாது கண்ணா? நம்பர் டூ. எல்லாரும் அப்படி இருந்தால் கூட , அதுக்கும் முழுப்பொறுப்பு அவங்களை சொல்லமுடியாது. சமூகத்துல
ஆணுக்கு செக்ஸ் கிடைக்காமலே இருக்குறதுனால , பெர்வர்ட்ஸ் தவிர வேறு எப்படி உருவாகுவாங்க? பெண்கள் கணுக்காலை காட்டினாலே ஜிவ்வுன்னு இருந்த நாட்கள் எனக்கே இருந்திருக்கு. ஹி ஹி."

"இத இதத்தான் சொன்னேன் சரியான பெர்வெர்ட்ஸ்ன்னு?"

"இதுல என்ன பெவெர்ஷன் இருக்கு? வளர்ர நேரத்துல என்னோட செக்ஸுவல் எனர்ஜி
ரீலீஸ் ஆகுறதுக்கான ஸ்டிமுலேஷன் அப்படி இருந்துச்சு. எல்லோருக்கும் அப்ப‌டித்தான இருக்கும்? பெண்களுக்கும் இருக்கும். என்ன நீங்க வெளில காமிச்சுக்கமாட்டீங்க. அட்லீஸ்ட் ஆண்கள்கிட்டயாவது காமிச்சிக்காம இருக்கணும்னு நினைப்பீங்க?ஒங்களைப்பத்தி தெரியாதா?"

சரி அப்படின்னா ரேப் பண்றவனுக்குகூட இதே நியாய‌த்தை அப்ளை பண்ணுவீங்களா?
சமூகத்துல கிடைக்கலன்னா அதுக்கு பொம்பளைங்கதான் விக்டிம்ஸ் ஆகனுமா?

இல்ல. நான் அப்படி சொல்லலையே. அநியாயமா பழி போடாத.

~~~
"என்னை இப்படி சிடு சிடுன்னு பேசாதே .. ப்ளீஸ் " ஸ் என்று முடிப்பதற்கும் இரண்டு கண்களிலும் திரண்டு நின்ற கண்ணீர்த்துளி விழுவதற்கு காரின் பின்னால் பார்க்கும் கண்ணாடியில் இவன் பார்ப்பதற்கும் நேரம் சரியாக ஒத்துப்போனது.

"நீ எதாவது சின்னதா சொன்னாகூட என்னால் தாங்க முடியல..ஏன்னா ஐ லவ் யோ சோஓஓ.. மச் புரிஞ்சுக்கோ ப்ளீஸ்" என்றவளின் குரல் கன‌த்து போயிருந்தது.

இவனுக்கு பேச நிறைய இருந்தாலும் இப்போது எதை முதலில் பேச ஆரம்பிப்பது என்று ஒரு சந்தேகத்துடன், எதையும் பேசாமலிருப்பது என்ற முடிவுக்கு வந்தான். பிரச்சினை மீன்டும் நினைவுக்கு வந்ததால் வண்டியை ஒரு கையால் ஓட்டுக்கொண்டு தது வலக்கையை தலையிலே லேசாக சொறிந்து கொள்வது போல் வைத்து கொண்டு சும்மா இருந்தான். சும்மா இருப்பது பல நேரங்களில் உதவி இருக்கின்றது.

இந்தியாவிலிருந்து கல்யாணம் முடித்து அமெரிக்காவுக்கு செல்லும் எல்லா பெண்களுக்கும் கனவு இருக்கிறது. கனவு எல்லோருக்கும் இருக்கிறதுதான். ஆனால் இவர்களுக்கு தன் கணவன் எதோ தங்கத்தினாலான காரிலே வைரம் பொறித்த ஆபரணங்களுடன் வந்திறங்குவான் என்பது போலானது. இங்கு வந்ததும்தான் தன் கணவன் நாட்டிலே எல்லோரும் வைத்திருபபதாலும்,
கார் வைத்திருக்க வில்லையென்றால் குளிர்காலத்திலே பால் வாங்கக் கூட நடந்து போக முடியாத நிலை இருப்பதால் ஒரு காரை அவனும் வாங்கி வைத்திருக்கிறான் என்று அறிகிறார்கள். அவனும் பணத்திலே குளிக்கவில்லை சாதாரண தண்ணீரிலே குளிக்கிறான் என்று உண்மையை கவனிக்கிறார்கள். ச‌ரி எப்ப‌டியோ கார் என்று இருக்கிறதே. இந்தியாவில் இருந்திருந்தால் அது கூட‌ இல்லாம‌ல் தானே இருந்திருக்க‌வேண்டும் என்று த‌ன்னை தேற்றிக்கொள்கிறார்க‌ள்.
இது எல்லாத்துக்கும் காரணம் அந்த இங்கிலீஷ்காரன ஒதைக்கனும். அவந்தான காருக்கு ப்ளெசர் கார்ன்னு பேர் வெச்சான். அந்த இழவாலதான மெட்ராசிலே கார் வெச்சிருந்தா ஆண்டைங்களை பார்க்குறதுப் போல பார்க்குறது ஆரம்பமாச்சு.

~~~

"பின்ன ஏன் ரேப் எல்லாம் நடக்குது சொசைட்டியில? அதுக்கும் எதாவது நியாய‌த்த சொல்லுவீங்க சொல்லுங்க கேக்குறன்".
"முதல்ல டென்ஷன் ஆகாம சொல்றத கேளு. ஒரு பொண்ண பாத்து ஒரு ஆணுக்கு ஏற்படுற பாலுணர்ச்சி விவரம் தெரியாத வயசுல இயற்கையான‌துன்னு நினைக்கிறோம்.
அதுக்கப்புறம்தான் அது கூட ஒருவிதத்துல அநாகரிகமானதுங்கறதே தெரிஞ்சுக்குறோம்.
அதுக்காக அப்படி தெரியாதவன் எல்லாம் ரேப் பண்ணுறான் சொல்லமுடியுமா?"

"சரி , உங்க வழிக்கே வர்றன், அப்படின்னா ஏன் அமெரிக்காவுல ரேப் நடக்குது? இங்கதான் டேட்டிங் பண்றாங்க இல்ல?"

"அமெரிக்காவுல எல்லாருக்கு டேட்டிங் வாய்ப்பு இருப்பதில்லை, ஆனா ரேப்புக்கும் அதுக்கும் சம்பந்தம் இருக்குமான்னு எல்லாம் நாமளே சொல்லிடமுடியாது, இன்னுகொஞ்சம் தெரிஞ்சுகுட்டுத்தான் பேசனும்"

"எவ்வளவு சொன்னாலும் , பொம்பளைங்க அவஸ்த ஆம்பளைங்களுக்கு புரியாதுங்குறது
நீங்க பேசறதுலேர்ந்தே தெரிஞ்சுக்கலாம்"

உணர்ச்சிவசப்படுபவளிடம் அதற்கு மேல் கண்ணீருக்கு பதில் சொல்லவேண்டும் என்று புரிந்து கொண்டவனாய் முழுதாய் சம்மதித்துக்கொண்டே நகர்ந்தான் காருண்யன்.

~~~~



1 comment:

Anonymous said...

good attempt

Anony